Parasakthi Movie Court Scene Dialogue Lyrics in Tamil Font. Sivaji Ganesan Famous Parasakthi Court Dialogue Lyrics in Tamil.
Parasakthi Movie Court Scene Dialogue Lyrics in Tamil Font. Sivaji Ganesan Famous Parasakthi Court Dialogue Lyrics in Tamil.
பல வழக்குகளை சந்தித்திருக்கிறது
புதுமையான மனிதர்களை கண்டிருக்கிறது
ஆனால் இந்த வழக்கு
விசித்திரமும் அல்ல
வழக்காடும் நானும்
புதுமையான மனிதன் அல்ல
வாழ்க்கைப் பாதையிலே
சர்வ சாதாரணமாக தென்படக்கூடிய
ஒரு ஜீவன் தான் நான்
கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்
பூசாரியைத் தாக்கினேன்
குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன்
இப்படியெல்லாம்
நீங்கள் எதிர்ப்பார்பீர்கள்
நான் இதையெல்லாம்
மறுக்கப் போகிறேனென்று
இல்லை நிச்சயமாக இல்லை
கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்
கோவில் கூடாது என்பதற்காக அல்ல
கோவில் கொடியவரின் கூடாரமாய்
இருக்க கூடாதென்பதற்காக
பூசாரியைத் தாக்கினேன்
அவன் பக்தன் என்பதற்காக அல்ல
பக்தி பகல் வேசமாய்
ஆகிவிட்டதை கண்டிப்பதற்காக
உனக்கேன் இவ்வளவு அக்கறை
உலகத்தில் யாருக்கும் இல்லாத
அக்கறை என்று கேட்பீர்கள்
நானே பாதிக்கப்பட்டேன்
நேரடியாக பாதிக்கப்பட்டேன்
சுயநலம் என்பீர்கள்
என் சுயநலத்திலே
பொது நலமும் கலந்திருக்கிறது
ஆகாரத்திற்காக அழுக்கை சாப்பிட்டு
தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன்
அதைப் போல என்னைக்
குற்றவாளி என்கிறார்களே
இந்த குற்றவாளியின்
வாழ்க்கை பாதையிலே
கொஞ்ச தூரம் பின் நோக்கி
நடந்து பார்த்தால்
அவன் கடந்து வந்துள்ள
காட்டாறுகள் எவ்வளவு என்று
கணக்குப் பார்க்க முடியும்
பாட்டொலிக்கும் குயில்கள்
இல்லை என் பாதையில்
படமெடுக்கும் பாம்புகள்
நெளிந்திருக்கின்றன
தென்றலை தீண்டியதில்லை நான்
தீயை தாண்டியிருக்கிறேன்
கேளுங்கள் என் கதையை
தீர்ப்பெழுதுவதற்கு முன்
தயவு செய்து கேளுங்கள்
தமிழ்நாட்டிலே
இந்த திருவிடத்திலே பிறந்தவன் நான்
பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு
தமிழ்நாட்டின் தலை எழுத்திற்கு
நான் விதி விலக்கா
ரங்கூன் என் உயிரை வளர்த்தது
உயர்ந்தவன் ஆக்கியது
திருமணக் கோலத்திலே இருக்கும்
என் தங்கையைக் காண வந்தேன்
மோசடி வழக்கிலே ஈடுபட்டு
குற்றவாளிக் கூண்டிலே
உங்கள் முன்னால் நிற்கிறாளே
இதோ இந்த ஜாலக்காரி ஜாலி
இவள் வலையிலே வீழ்ந்தவர்களில்
நானும் ஒருவன்
பணப்பெட்டியைப் பறிக்கொடுத்தேன்
பசியால் திரிந்தேன் மெலிந்தேன்
கடைசியில் பைத்தியமாக மாறினேன்
காண வந்த தங்கையைக் கண்டேன்
கண்ணற்ற ஓவியமாக
ஆம் கைம்பெண்ணாக
தங்கையின் பெயரோ கல்யாணி
மங்களமான பெயர்
ஆனால் கழுத்திலோ மாங்கல்யம் இல்லை
செழித்து வாழ்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது
கையிலே பிள்ளை கண்ணிலே நீர்
கல்யாணி அலைந்தாள்
கல்யாணிக்காக நான் அலைந்தேன்
கல்யாணிக்கு கருணைக்
காட்டினார்கள் பலர்
அவர்களிலே காளையர் சிலர்
கைம்மாறாக அவள் காதலைக் கேட்டனர்
கொலை வழக்கிலே சம்பந்தப்பட்டு
கைதியாக நிற்கிறானே
இதோ இந்த கொடியவன் வேணு
இவன் பகட்டால் மயக்க
முயன்றான் என் தங்கையை
நான் தடுத்திராவிட்டால்
என் தங்கை அப்போதே
தற்கொலை செய்து கொண்டிருப்பாள்
கடவுள் பக்தர்களும்
கல்யாணியை காப்பாற்ற வந்தார்கள்
பிரதி உபகாரமாக
அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டு
அவர்களில் தலைமை ஆனவன்
இதோ இந்த பூசாரி
கல்யாணியின் கற்பைக்
காணிக்கையாக கேட்டிருக்கிறான்
பராசக்தியின் பெயரால்
உலக மாதாவின் பெயரால்
கல்யாணி உலகத்தில்
புழுவாக துடித்தபடியாவது
உயிரோடு இருந்திருப்பாள்
அவளை தற்கொலை
செய்து கொள்ள தூண்டியது
இந்த பூசாரி தான்
தன் குழந்தை
இந்த இரக்கமற்ற உலகத்திலே
விட்டு செல்ல அவள் விரும்பவில்லை
ஆதரவற்ற தன் குழந்தை
துடித்து சாவதை அவள் விரும்பவில்லை
அவளே கொன்று விட்டாள்
விருப்பமானவர்களை
கொல்வது விந்தையல்ல
உலக உத்தமர் காந்தி
அஹிம்சா மூர்த்தி
ஜீவகாருண்ய சீலர்
அவரே நோயால் துடித்து
கொண்டிருந்த கன்றுக்குட்டியைக்
கொன்று விட சொல்லியிருக்கிறார்
அது கஷ்டமுறுவதை காண சகிக்காமல்
அதே முறையைத் தான்
கையாண்டிருக்கிறாள் கல்யாணி
இது எப்படி குற்றமாகும்
வெளிநாட்டிலிருந்து திரும்பிய
ஒரு தமிழனுக்கு வாழ வழியில்லை
தமிழ்நாட்டிலே பிறந்த
ஒரு பெண்ணுக்கு
வாழ்வதற்கு பாதுகாப்பில்லை
என் தங்கை மட்டும்
கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால்
கோடீஸ்வரன் வீட்டு
பள்ளியறையிலே ஒரு நாள்
மானத்தை விலை கூறியிருந்தால்
மாளிகை வாசியின் மடியிலே ஒரு நாள்
இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை
இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது
பகட்டு என் தங்கையை துரத்தியது
பயந்து ஓடினாள்
பணம் என் தங்கையை துரத்தியது
மீண்டும் ஓடினாள்
பக்தி என் தங்கையை பயமுறுத்தியது
ஓடினாள் ஓடினாள்
வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்
அந்த ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும்
வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும்
இந்த சட்டத்தை தீட்டுவோர் செய்தார்களா
வாழ விட்டார்களா என் கல்யாணியை
குற்றவாளி யார் வழக்கிற்கோ
வக்கீலாக மாறுகின்றார்
இல்லை யார் வழக்கிற்கும் இல்லை
அதுவும் என் வழக்கு தான்
என் தங்கையின் வழக்கு
தங்கையின் மானத்தை
அழிக்க எண்ணிய மாபாவிக்கு
புத்தி புகட்ட அண்ணன்
ஓடுவதிலே என்ன தவறு
கல்யாணி தற்கொலை செய்து கொள்ள
முயன்றது ஒரு குற்றம்
குழந்தையை கொன்றது ஒரு குற்றம்
நான் பூசாரியை தாக்கியது ஒரு குற்றம்
இத்தனை குற்றங்களுக்கும்
காரணம் யார் யார் யார் காரணம்
கல்யாணியை கஞ்சிக்கு
வழியில்லாதவளாக அலையவிட்டது
யார் குற்றம் விதியின் குற்றமா அல்லது
விதியைச் சொல்லி வயிறு வளர்க்கும்
வீணர்களின் குற்றமா
பணம் பறிக்கும் கொள்ளை கூட்டத்தை
வளரவிட்டது யார் குற்றம்
பஞ்சத்தின் குற்றமா அல்லது
பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைத்த
வஞ்சகர்களின் குற்றமா
கடவுள் பெயரால் காமலீலை நடத்தும்
போலி பூசாரிகளை நாட்டிலே
நடமாட விட்டது யார் குற்றம்
கடவுளின் குற்றமா அல்லது
கடவுள் பெயரைச்சொல்லி
காலட்சேபம் நடத்தும் கயவர்கள் குற்றமா
இந்த குற்றங்கள் களையப்படும் வரை
குணசேகரன்களும் கல்யாணிகளும்
குறையப்போவதில்லை
இது தான் எங்கள் வாழ்க்கை ஏட்டின்
எந்த பக்கம் புரட்டினாலும் காணப்படும்
பாடம் பகுத்தறிவு பயனுள்ள அரசியல் தத்துவம்